தேர்தல் திருவிழா
மூன்று நாட்கள் பயிற்சி
வசிப்பிடத்திற்கும்
பணியிடத்திற்கும்
சம்பந்தமேயில்லா
தொலைவிடத்தில்...
எவ்வித பயிற்சியும்
வழங்காமலேயே...
அடிப்படை வசதிகள்
ஏதுமில்லா
தேர்தல் மையங்கள்..
உறவு துறந்து
ஊண் உறக்கம் துறந்து
ஊர் பறவையாய்....
நீரில்லாமல்
உணவில்லாமல்
காற்றை மட்டுமே சுவாசித்து வாழுமாம் சாதகப் பறவை...
தேர்தல் பணியாற்றும்
ஒவ்வோர் ஆசிரியரும்
சாதகப் பறவையே...
வான் பார்த்து
குளித்ததுண்டா நீங்கள்??
நாங்கள் குளிப்போம்
நட்சத்திரங்களுடன்
உரையாடிக் கொண்டே...
குருவி குயில் ஆந்தை
கண்டோம்
பாம்பைதான் காணவில்லை
அதற்கும்
முதலுதவிப் பயிற்சி
பெற்றே இருக்கிறோம்..
11 மணி நேரம்
அமர்ந்த இடத்திலிருந்து
அசையாமல் இருந்ததுண்டா...
இயற்கை உபாதைகளுக்கும்
இடம் பெயராமல்..
கின்னசில்தான்
இடம்பெறவில்லை..
அனைத்து வகை
மக்களையும் கையாளும் மந்திரவாதி
நாங்கள்
கற்றவர் கல்லாதவர்
பணக்காரர் பாமரர்
முட்டாள் மூர்க்கர்
முக்கியமாய்
'குடிமகன்', களையும்
சேர்த்தே...
இவ்வனைத்தும்
கடந்து கடமையாற்றும்
எங்கள் முகத்தில்
சினமோ வெறுப்போ
காழ்ப்புணர்வோ
சிறிதேனும்
கண்டதுண்டா...
'செவாலியே விருது',
எங்களுக்கே உரியது...
100 முறை ஒரே எண்ணையும்
ஊரையும் எழுதியதுண்டா...
பள்ளிப் பருவத்தை
கடக்கவில்லை இன்னமும் நாங்கள்
எழுதிக் கொண்டே....
அனைவரிடமும்
அன்பு பாராட்டி
அனைத்தும் முடித்து
அதிகாரியை
ஆர்வமாய் எதிர்நோக்கி இன்னிசை இரவில்..
முட்டாள் மாணவராய்
எமை எண்ணி
முந்நூறு முத்தான
கேள்விகளால்
கணை தொடுக்கும்
கனவானையும் சமாளித்து
சமர்ப்பித்த பின்னே
சமநிலைக்கு வருவோம்...
இனிதான் இருக்கிறது
இனிமையே...
இதுவரை கடமையாளராக
காட்சியளித்த நாங்கள்
இரவில் இன்னலின்றி இல்லம் திரும்புவது
எவ்விதம்...
இதைப் பற்றிய எவ்விதக் கவலையும்
கொள்ளா நிர்வாகத்தால்
'அனாதைகளாய்',
தெருவில் நாங்கள்...
அன்றும் இன்றும்
என்றும்
எங்களுக்குத் துணை
எங்கள் சக ஆசிரியர்களே
அவர்கள் ஆணோ, பெண்ணோ...
சரி இத்தனையும்
கடந்த எங்களுக்கான
உழைப்பூதியம்
அறிவீரா??..
வாக்குச்சாவடி அலுவலர் 1700/_
பிற அலுவலர் 1300/_
இதைத் தூக்க இயலாமல்
தூக்கிக் கொண்டு
இல்லம் திரும்பினோம்
இரு நாட்களுக்குப் பிறகு நடு நிசியில்....
இவ்வளவுக்குப் பிறகும்
இனி தேர்தல் பணி
தவிர்ப்போம் என்றா
எண்ணுகிறீர்கள்????
இல்லவே இல்லை
இனிமையாய்
பணியாற்றுவோம்
இனியும்.....
ஏனெனில் ஏனெனில்
அரசுக்கும் சமுதாயத்திற்குமான
இறைதூதர்கள்
நாங்களே.....
ஆசிரியப் பணி
அறப் பணி...
பெருமையும் கர்வமும்
கொள்கிறோம்
அரசுப் பள்ளி
ஆசிரியராய்...
No comments:
Post a Comment