அரசுப் பள்ளிகளைக் காக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, 'இந்திய மாணவர் சங்கம்' சார்பில் நீண்டதூர சைக்கிள் பேரணி தமிழகத்தில் நடந்துவருகிறது. மாணவர்களின் இந்தப் பேரணி சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய நான்கு பகுதிகளில் இருந்தும் மே 25-ம் தேதி, தனித்தனி குழுக்களாகப் புறப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் சைக்கிள் ஓட்டியபடி வருகின்றனர்.
பேரணி
மொத்தப் பயணம், 1,500 கி.மீ. வழியெங்கும் பல்வேறு இடங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தங்கள் கோரிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். ‘அரசுப் பள்ளிகளை மூடாதே!’, ‘தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்து’, ‘எனக்கான பள்ளி எங்கே?’ ‘நீட் தேர்வை ரத்து செய்!’, ‘கல்வி வியாபாரமல்ல!’, ‘தாய்மொழிக் கல்வி கட்டாயம்’ ஆகிய வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு வருகின்றனர், மாணவர்கள்! ஏழுநாள் பேரணி, 31-ம் தேதியன்று திருச்சியில் நிறைவடைகிறது.
களியக்காவிளையில் கேரள முன்னாள் கல்வி அமைச்சர் M.A.பேபி தொடங்கிவைத்த குமரி குழுப் பேரணி, இன்று காலை மதுரையை அடைந்தது. திருப்பரங்குன்றம் பைக்காரா பகுதியில் பேரணிக் குழுவுக்கு மதுரை மாநகர் எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பழச்சாறுகளும் தண்ணீரும் தந்தனர். இந்தக் குழுவில் 14 மாணவிகள் உள்பட 60 மாணவர்கள் உள்ளனர்.
குழுவினர் நம்மிடம், “மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தி வலுவூட்டவேண்டிய அரசாங்கமே, சத்தமின்றி 1,500 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டது. இன்னும் 2,500 பள்ளிகளை மூடிவிடத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு, 2,60,000 பள்ளிகளை மூடப்போகிறது. நீதிமன்றம் வரையிலும் போராடி மதுக்கடைகளைத் திறக்கும் அரசாங்கம், அரசுப் பள்ளிகளைக் காலிசெய்துவருகிறது" என்று குற்றம் சாட்டினார், பயணக் குழுவைத் தலைமையேற்று நடத்திவருபவரும், எஸ்எஃப்ஐ மாநிலத் தலைவர்களுள் ஒருவருமான கண்ணன். மேலும், "அரசுப் பள்ளிகளுக்கு எதிரான இதே நிலை தொடர்ந்தால், லட்சக்கணக்கான மாணவர்களைத் திரட்டிப் போராடுவோம்" எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சைக்கிள் பயணக் குழுவினருள் ஒருவரும் எஸ்எஃப்ஐ மத்தியக்குழு பெண் உறுப்பினருமான சத்யா, "குமரியில் நாங்க கிளம்பினப்போ அடைமழை. மறுநாள் நெடுஞ்சாலையில கடும் வெயில். இதையெல்லாம் கடந்து எங்களால பயணிக்க முடியுதுன்னா, உரிமைக்கான போராட்டம் நடத்துறோம்ங்கிற உந்துதல்தான். இந்தப் பயணத்தினால மக்கள்கிட்ட நெருங்க முடியுது. விவரம் கேக்குறவங்ககிட்ட தெளிவா எடுத்துச்சொல்லுவோம். 'உங்க போராட்டத்துக்கு நாங்களும் துணை இருப்போம்'னு எங்களை வாழ்த்தி அனுப்புறாங்க. நாங்க முன்னெடுத்திருக்கிற கோரிக்கையை மக்களும் வழிமொழியுறாங்க" என்று கூறினார்.
மாணவர் சித்ரவேல், "எங்க பேரணியைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு பல குடும்பங்கள் கார்ல வந்து இறங்கி, ‘எதாச்சும் சாப்பிடுறதுக்கு வச்சுக்கோங்க’, ‘வெயில் தாங்குறதுக்குத் தொப்பிகள் வாங்கிக்கோங்க’ன்னு பணம் கொடுத்துட்டுப் போறாங்க. நாங்க படிச்ச ஸ்கூல்களுக்கும் சேர்த்துதான போராடுறீங்கன்னு சொல்லி வாழ்த்துறாங்க. அப்படி அவங்க சொல்றப்போ, எங்களுக்கு பதில்பேச வார்த்தையே வரல. அந்த வழியா கார்ல வந்த ஒருத்தர், எங்களப் பார்த்திட்டு, ‘நான் படிச்ச ஸ்கூலையும் அப்போ மூடப் போறாங்களா’ன்னு கேட்டப்போ, நாங்க துடிச்சிட்டோம். கண்டிப்பா அரசுப் பள்ளிகளை மீட்போம்ங்கிற வேகம் இன்னும் அதிகமாகுது" என்றார்.
பேரணி
அங்கே வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்காநத்தம் பகுதி குழுச் செயலாளர் இளங்கோவன் நம்மிடம் கூறுகையில், “ ‘கல்வி, வியாபாரத்துக்குட்பட்டது’ என்ற எண்ணத்தைத் தனிநபரும், அரசாங்கமும் தொலைத்தெறிய வேண்டும். பெண் கல்வி, பாலியல் கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க வலியுறுத்த வேண்டிய நாம், 'பள்ளிகளை மூடக் கூடாது' எனப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோமே” என்று வேதனை தெரிவித்தார்.
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பைக்காரா முத்துராமலிங்கம் நகர் பூங்காவுக்குள் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், நகருக்குள் சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தனர். இன்றிரவு திண்டுக்கல்லில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கும் இவர்கள், காலையில் மீண்டும் பயணத்தைத் தொடர உள்ளனர்.
நன்றி விகடன்
No comments:
Post a Comment