டெட் தேர்வுக்கு, நடப்பாண்டு வகுப்பு வாரியாக பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது, தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு (டெட்)தேதியை, கடந்த 15ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆறு லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், டெட் தேர்வுக்கு வகுப்பு வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது, ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
2011 முதல் நடந்த நான்கு டெட் தேர்வுகளுக்கும், பாடத்திட்டம் குறிப்பிடப்படவில்லை.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடபுத்தகங்கள் மற்றும் கல்வி உளவியலை அடிப்படையாக கொண்டே, வினாக்கள் எடுக்கப்பட்டன. இதன்படியே ஆசிரியர்கள் தேர்வுக்கும் தயாராகினர்.
ஆனால், கடந்த ஏப்., 5ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நடப்பாண்டு டெட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டன. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடபுத்தகங்களும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு பாடபுத்தகங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டம் குறிப்பிடப்பட்டது வரவேற்புக்குரியது என்றாலும், வினாக்கள் தேர்வு குறித்து குழப்பம் நீடிக்கிறது. மற்ற வகுப்பு பாடங்களிலிருந்து, வினாக்கள் கேட்டால் யார் பொறுப்பேற்பது.
இதுகுறித்து, அரசே தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment