பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரில் உணவு சமைக்க வேண்டும் என்று சத்துணவு பணியாளர்களுக்கு சமூகநலத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சாம்பார், லெமன், தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான சாதங்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு மதிய நேரங்களில் அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் கடந்த 3-ம் தேதி திறக்கப்பட்டன.இந்நிலையில், சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு தரமான, சுவையான உணவுகளை வழங்குவதற்கு சமூகநலத் துறையின் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக, பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரில் உணவு சமைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று சத்துணவு பணியாளர்களுக்கு சமூகநலத் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது : தண்ணீரால் மாணவர்களுக்கு எத்தகைய உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
இதன் அடிப்படையில், தண்ணீர்த் தொட்டிகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும், உணவுக்காகப் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், சுத்தமானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment