கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் -1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக ஜூன் 17ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு விவரம்:
சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குரூப் -1 தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். கடந்த மார்ச் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப்- 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 1,68,000 பேர் எழுதியிருந்தனர். அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 9,050 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. கட் ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறு என்றும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த தேர்வு நடத்தப்பட்டது என்றும் விக்னேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே குரூப்-1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும், 24 கேள்விகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்வு குளறுபடி தொடர்பாக பதிலளிக்க உத்தரவு:
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக கோபம் அடைந்த நீதிபதி, தாம் தேர்வுக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நேற்று பிற்பகல் டி.என்.பி.எஸ்.சி தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். மேலும் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகளும் தவறானவை என தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தரப்பு பதிலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதி தேர்வுகளில் குளறுபடி நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக ஜூன் 17ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரிக்கை:
இந்த நிலையில், தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 5% பேர் பாதிக்கப்பட்டாலே தேர்வை ரத்துச் செய்யலாம் என்று விதி உள்ளது. இதையடுத்து தேர்வு எழுதியவர்களில் 20% பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment