பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் தமிழின் தொன்மை குறித்த சர்ச்சை கருத்துகள் இடம்பெற்ற பாடம் முழுவதையும் நீக்கபள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 கல்வி ஆண்டுகளாக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டம் மாற்றப்பட்ட நிலையில், முரண்பாடான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அவ்வப்போது சர்ச்சைகளும் உருவாகி வருகின்றன. இவை தொடர்பாக எதிர்ப்புகள் வரும்போது, கல்வித்துறை அப்பகுதிகளை நீக்குவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்19 பிழைகளை திருத்துவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்த தகவல் வெளியானது. குறிப்பாக, தமிழ் மொழியைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற பொருள்படும்படியான கருத்துகள் அதில் கூறப்பட்டிருந்தது. பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல் எழும்பியது. இதுதொடர்பாக உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். தொடர்ந்து, ஆங்கில பாடப்புத்தக தயாரிப்புக் குழுவில் இருந்த 13 ஆசிரியர் களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குமாறுஅனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘‘புதிய பாடத்திட்டம் பிளஸ்2 வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், அலகு 5-ல் ‘தி ஸ்டேட்டஸ் ஆஃப் தமிழ் அஸ் எ கிளாசிக் லாங்குவேஜ்’ என்ற பாடம் முழுவதையும் குறிப்பாக பக்கம் 142 முதல் 150 வரை நீக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மை கல்வி அலுவலர்கள் இதை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment