மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'இந்து தமிழ்' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அன்பாசிரியர் 29: மணிமாறன்- களப்பயணக் கல்வியே இவர் பாடத்திட்டம்! என்ற அத்தியாயத்தில் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் எந்த நவீன வசதியும் இல்லை என்றும் யாராவது பள்ளிக்கு வந்து பார்க்கலாமா என்று கேட்டால் சங்கடத்துடன் மறுக்கும் சூழ்நிலையில் இருப்பதாகவும் அன்பாசிரியர் மணிமாறன் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'இந்து தமிழ்' வாசகர்கள் லட்சக்கணக்கில் செலவிட்டு, பள்ளிக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடுத்துள்ளனர்.
இதுகுறித்து மகிழ்ச்சியுடன் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அன்பாசிரியர் மணிமாறன், ''கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் (1986- 1987) முன்னாள் மாணவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலராதாநல்லூர் வந்து இப்பள்ளியை பார்வையிட்டனர்.
இவர்கள் அனைவரும் பெங்களூருவில் வசித்து வரும் முன்னாள் மாணவர் பத்மநாபன் தலைமையில் ஒருங்கிணைந்து ரூ.1.40 லட்சத்தை அளித்தனர். அமெரிக்காவில் வசிக்கும் சரவண சுதந்திரா என்பவர் இந்தியா டீம் என்ற அமைப்பின் மூலமாக ரூ.2.10 லட்சம் கொடுத்தார். சென்னை வருமான வரித் துறையினரின் கஜா புயல் மீட்புக் குழுவினர் மற்றும் வருமான வரித் துறை இணை இயக்குநர் ரங்கராஜ் ஆகியோர் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
மொத்தம் வசூலான ரூ.4 லட்சம் நன்கொடையில், பள்ளிக் கட்டிடத்தை முழுமையாக சீரமைத்தோம். அத்தோடு பள்ளியின் சுற்றுச்சுவர்களில், கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள், தேசத் தலைவர்கள், தமிழறிஞர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களான நம்மாழ்வார், சலீம் அலி, நெல் ஜெயராமன் போன்றோரின் படங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்தியா, தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம் ஆகியவற்றின் நில வரைபடங்கள் வரையப்பட்டு, எங்கள் பள்ளியே புதுப்பொலிவு பெற்றுள்ளது.
கட்டிட சீரமைப்புக்கே தன்னார்வலர்களின் நிதி சரியாக இருந்தது. இதனால் சொந்த நிதியாக ரூ.1.20 லட்சம் செலவில், பராமரிப்பின்றி இருந்த விளையாட்டு மைதானத்தைச் சீரமைத்து, சுற்றுச்சுவரை அமைத்துக் கொடுத்துவிட்டேன். தற்போது பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம்.
இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய 'இந்து தமிழ் இணையதளத்துக்கு' நன்றி'' என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் மணிமாறன்.
No comments:
Post a Comment