புதுக்கோட்டை,ஆக.6: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து பெற்றோர்கள் சரியான பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதுக்கோட்டை வட்டார வளமையத்தில் நடைபெற்றது.
மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் மனதில் மனச்சுமை இருக்க கூடாது.மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்,சூழ்நிலைகளையும் பெற்றோர்கள் தான் உருவாக்கி தர வேண்டும்.மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை சரியாக வளர்த்து முறையான பயிற்சி அளித்தோம் எனில் அந்த குழந்தைகளிடம் உள்ள தனித் திறன் மேம்பாடு அடையும்.எனவே மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளிடம் உள்ள திறமையை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவர்கள் கூறிய படி சரியான பயிற்சி அளிக்க வேண்டும். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை உதாசீனப்படுத்த கூடாது.அவர்களோடு பெற்றோர்கள் நேரத்தை செலவிட வேண்டும்.அப்பொழுது தான் அந்த குழந்தைகளிடம் உள்ள அளப்பரிய ஆற்றல் வெளிப்படும்.
மேலும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை அதற்கென உள்ள சிறப்பு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை மிகச்சிறந்த வல்லுநர்களாக மாற்ற பெற்றோர்களும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.குறிப்பாக மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்றார்.பின்னர் முகாமிற்கு வந்திருந்த மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை வைத்து குத்துவிளக்கேற்றி முகாமினை தொங்கி வைத்தும்,பொன்னாடை அணிவித்தும் கௌரவித்தார்.
முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் ஆசைத்தம்பி,மனநல மருத்துவர் ராஜேஷ்குமார்,காது ,மூக்கு,தொண்டை மருத்துவர் ஆறுமுகம்,கண் மருத்துவர் முருகன் ,மூடநீக்கியல் மருத்துவர் ராஜாராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
முகாமில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆர்.மகேஷ்வரன்,அரு.பொன்னழகு,கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவி தலைமையில் சிறப்பாசிரியர்கள்,இயன்முறைமருத்துவர்கள்,வட்டார வளமைய பயிற்றுநர்கள் செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment