நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேர மாணவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த கல்வித் துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வு களுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், ‘ஸ்பீடு’ என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.எனினும், அரசின் மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களில் மிகவும் குறைந்த நபர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களிலும் ஒரு சிலருக்கே மருத்துவக் கல்லுாரிகளில் சேர இடம் கிடைப்பதால் அரசு பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து நடப்பு ஆண்டு போட்டித்தேர்வுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்களை கல்வித் துறை செய்துள்ளது. முதல் கட்டமாக பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 412-ல் இருந்து 506 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசின் இலவச பயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு களுக்கு தேர்வான மாணவர் களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி அவரவர் பள்ளிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கான வினாக்கள் விடைக்குறிப்புடன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம்அனுப்பி வைக்கப்படும்.தகுதித்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆகஸ்ட் 12-க்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.தொடர்ந்து மாணவர்களை திறம்பட தயார் செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை குறுந் தேர்வு நடத்தப்படும்.
இதற்கான வினாத்தாள், விடைக்குறிப்புகள் முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அவர்கள் சம்பந்தபட்ட பள்ளி களுக்கு மின்னஞ்சல் மூலம் வினாத் தாள்களை அனுப்ப வேண்டும்.குறுந்தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுத லாம். நடப்பு கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் குறுந்தேர்வுகள் நடத் தப்படுகின்றன. இதுகுறித்த அறி வுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசின் பயிற்சிக்கு தகுதியற்ற மாணவர்கள் அதிக அளவில் வந்துவிடுவதால் அதன் நோக்கம் சிதைபட்டு வருகிறது. பள்ளிகளும் திறமையுள்ள மாண வர்களைத் தேர்வுசெய்து அனுப்பு வதில் சுணக்கம் காட்டுகின்றன.இதைத் தவிர்க்கவே தகுதித் தேர்வு முறையை அமல்படுத்தி உள்ளோம். அதன்படி தகுதித்தேர் வில் வட்டார அளவில் முன்னி லையில் உள்ள 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப் படும். இவர்களுக்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான வினாத்தாள்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்யும். ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் பயிற்சி தொடங்கும்’’ என்றனர்.இதற்கிடையே மதுரை உட்பட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி பருவத்தேர்வுகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கல்வித் துறையின் இந்த முயற்சியால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.எவ்வித முன்னறிவிப்பும் இல் லாமல் திடீரென சில நாட்களுக்கு முன் தேர்வு அறிவிப்பை வெளியிடு வது ஏற்புடையதல்ல. வினாத்தாள் முறை, பாடப்பகுதி குறித்த தகவல் களும் வழங்கவில்லை. எனவே, குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கி தேர்வை நடத்த கல்வித் துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment