மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனக்கோரி மாணவி அதிகை முத்தரசி (6) சார்பில் அவரது தந்தை பாஸ்கரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. பள்ளியை புதுப்பிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கல்வியை சிறப்பாக வழங்க அனைத்து ஏற்பாடும் செய்து வருவதாக கூறும் அரசும், அரசு அதிகாரிகளும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திருவள்ளூர் கலெக்டர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், பொன்னேரி தாசில்தார், தொடக்கக்கல்வி அலுவலர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் அரசு வக்கீலுக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment