🔸 நீங்கள் இப்படிச் சலித்துக் கொண்டு செய்யும் இந்த வேலை தான் உங்களுக்கு... உங்களுக்கென ஒரு சமூக அந்தஸ்தையும்.. உற்றார் உறவினர் மத்தியில் மரியாதையையும்.. உங்களுக்கொரு தனித்த அடையாளத்தையும்.. இதையெல்லாவற்றை விடவும் நீங்கள் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம்..பணம்..காசு..எனும் வாழ்வாதாரத்தை உங்களுக்கு வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்..!!
🔹 வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!! வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களது வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்.. வலி.. வேதனை.. ரணம்.. அவமானம்..துயரம்..துக்கம்..மிக மிகப் பெரியது..!! கடலளவு கண்ணீரைச் சுமந்தபடி.. தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை.. அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!! இங்கு எல்லோருக்கும் பிடித்த வேலை கிடைத்து விடுவதில்லை..!! பெரும்பாலும் கிடைத்த வேலையைத் தான் செய்து கொண்டிருப்பதால் இயல்பாக உருவாகும் சலிப்பும் சோர்வும் தான் நீங்கள் குறிப்பிடும் அந்த வொர்க் பிரஷர்... ப்ரொஃபஷெனல் ஸ்ட்ரெஸ்..!! உண்மையில் வேலைப் பளுவென்பது நீங்கள் பெற்ற சிசு அதை நீங்கள் அள்ளியெடுத்துக் கொஞ்சும் போது உங்கள் நெஞ்சில் அது தன் பிஞ்சுக் கால்களால் எட்டி உதைப்பதற்கிணையான ஆனந்த வலி.. இன்பச் சுமை..!! ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்... இந்த வேலையில்லாமல் நீங்கள் ஒரு செல்லாக்காசென்பது புலப்படும்..!!
🔸 வேலைக்குச் செல்லத் தகுந்த அத்தனை தகுதிகளும் நிரம்பியிருந்தும் ஏதேதோ காரணங்களால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பேயமையாமல் முழு நேரமும் குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கு கடைசி வரையிலும் உங்களைப் போல் ஆஃபிஸ் சென்று வருவது ஒரு கனவாகவே கரைந்து மறைந்து அவர்கள் நிராசையாகவே செத்து மடிவதும் நீங்கள் வாழும் இதே நாட்டின் நிலை தான் என்பதையுணரும் போது.. வேலைக்குச் சென்று வரும் நீங்கள் எத்தனை பெரிய வரம் பெற்றவர்கள் என்பது உங்களுக்கே புரியும்..!!
🔹 வேலைக்குச் செல்லும் உங்களுக்கு நிகராக.. இல்லையில்லை உங்களை விடவும் மிக அதிக ஸ்ட்ரெஸ் மன உளைச்சல் வீட்டோடு இருந்து வீட்டையும் தன் வீட்டு வேலைகளையும் மேலாண்மை செய்யும் குடும்பத் தலைவிகளுக்கு உண்டு..!! தான் அதுநாள் வரை செய்து கொண்டிருந்த வேலை பறி போனவர்களுக்கும்.. குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகியவர்களுக்கும் வேலையின் அருமை என்னவென்று உணர்வுப்பூர்வமாகத் தெரிந்திருக்கும்..!!
🔸 படிப்பு முடிந்து உடனே அல்லது படித்துக் கொண்டிருக்கும் போதே மிக இளம் வயதில் திருமணம் முடிந்து.. குழந்தைகள் பெற்று வளர்த்து அதன் பிறகும் தீராத வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு உங்கள் வேலைப்பளுவெல்லாம் தூசுக்குச் சமம்..!! அதை வேலைப் பளு.. சுமை..ஸ்ட்ரெஸ் எனக் குறிப்பிடாதீர்கள்..!! கொஞ்சம் கூடுதல் வேலை என்பது ரசித்து இன்முகத்தோடு நீங்கள் ஏற்க வேண்டிய உங்களுக்கான வெகுமதியாகும்..!! இதையெல்லாமும் கடந்து நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை உங்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறதென நீங்கள் நினைத்தால் இப்போதே அந்த வேலையிலிருந்து வெளியேறி உங்கள் மன உடல் வலிமைக்குத் தகுந்த வேறொரு வேலையைத் தேடத் தொடங்குங்கள்..!!
🔹 வேலையென்பது வேலை மட்டுமேயல்ல அது நம் வாழ்க்கையின் ஆதாரம் அஸ்திவாரம்..!! எதற்காகவும் உங்கள் உத்யோகத்தைச் சபிக்காதீர்கள்..!! வேலையென்பது சாபமல்ல..நீங்கள் உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு.. வசதி..வரம்..!!
No comments:
Post a Comment