தங்கத்துக்கு இணையாக தற்போது வெங்காயம்…பாதுகாக்கும் விவசாயிகள்…!
வரலாறு காணாத அளவில் வெங்காய விலை உயர்ந்து வருவதால் தங்க நகைக் கடைகளுக்கு இணையாக வெங்காயச் செடிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்ட சுவாரஸ்யம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….
வெங்காயம்…. உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை..! என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்ட சாதாரண காய்கறி..! இன்று பவுனுக்கு இணையாக பாதுகாப்பு போடும் அளவுக்கு இதன் விலையும் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது..!
தமிழகத்தில் பெரம்பலூரில் விதைப்பதற்காக வைத்திருந்த 350 கிலோ சாம்பார் வெங்காயத்தை கொள்ளையர்கள் சிலர் மூட்டைகளுடன் களவாடிச்சென்று விட்டனர் என்ற புகார் காவல் நிலையத்தின் கதவுகளை தட்டியது.
திருமணத்தின்போது மணமகளுக்கு தங்க நகை அலங்காரத்திற்கு பதில் வெங்காய அலங்காரம் செய்திருப்பது போல் மீம்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
இன்னும் ஒரு படி மேலே போய் வெங்காயத்தை லாக்கரில் வைத்து பயன்படுத்துவது போல ஜாலியாக டிக்டாக் செய்து கலாய்த்துக் கொள்கின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 180 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகின்றது. சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் அறுவடைக்கு இன்னும் சில தினங்களேயுள்ளதால் வெங்காயத்தை கொள்ளையர்கள் தோண்டி எடுத்துச்சென்று விடகூடாது என்பதற்காக, கையில் அரிவாள் கம்புகளுடன் இரவுக்காவலுக்கு வயல்களில் காத்திருக்கின்றனர்.
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துவிட்ட நிலையில், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து தான் சிறிய அளவிலான பெல்லாரி வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படும் இத்தகைய வெங்காயம் தற்போது 130 ரூபாய் வரை விலை போவதால் தங்கள் வயல்களில் விளைவது வெங்காயம் அல்ல தங்கம் என்ற மகிழ்ச்சியில் பாதுகாப்பை பலபடுத்தியுள்ளனர் விவசாயிகள்
வெங்காய விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வெங்காய வருகையை மொத்த வியாபாரிகள் சென்னைக்கு வெளியே தடுத்து நிறுத்தி பதுக்கி விடுவதால் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பல ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ஏற்றப்பட்டு விட்டாலும் சில ஓட்டல் உரிமையாளர்கள் எப்படியும் வெங்காயம் விலை கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கையில் விலையேற்றத்தை தவிர்த்து வருவதாக தெரிவித்தனர்
வெங்காயத்தை உரித்தால் மட்டும் இல்லை… விலையை கேட்டாலே இப்போதெல்லாம் கண்ணீர் வருகிறது என்பதே கசப்பான உண்மை..
இணையத்தில் பகிர
No comments:
Post a Comment