தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 50 பேர் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று காலை வரை 42 பேருக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை மேலும் 8 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "ஈரோடு மாவட்டத்தில் தாய்லாந்து நபர்களுடன் தொடர்பில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 89 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோல 295 பேர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு வார்டுகளில் 17 ஆயிரம் படுக்கை வசதிகள் மற்றும் 3,018 வெண்டிலேட்டர் வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1,763 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 1,632 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் குறித்து பதிவிட்டுள்ளார். இவர் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமானவர்கள் பற்றிய தகவல்களை உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment