அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் மட்டும் போதுமா? - முனைவர் மணி கணேசன் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 30 July 2019

அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் மட்டும் போதுமா? - முனைவர் மணி கணேசன்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


கடந்த ஜூன் முதல்வாரம் முதற்கொண்டு தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த 2381 அங்கன்வாடி மையங்கள் மழலையர் கல்வி மற்றும் முன்பருவக் கல்வி பழக்கும் மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. 

இம்மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று இடைநிலை ஆசிரியர் ஒழிப்புப் பணியிடங்களில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மூத்த பள்ளி இளையோரைப் பணியிறக்கம் செய்து முன்பருவக் கல்விப் பயிற்றுநராகக் கட்டாய  மாற்றுப்பணி ஆணை வழங்கப்பெற்று பணிபுரிய பணித்துள்ளனர். 

இத்தகையோர் நிலை திரிசங்கு நரகமாக இருப்பது வேதனைக்குரியது. ஏனெனில், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் ஊதியம்; புதிய பள்ளியில் பணி செய்தல் என்னும் நிலையில் பள்ளி, மாணவர், ஆசிரியர் குறித்த முழுவிவரங்களை உள்ளடக்கிய கல்வி மேலாண்மைத் தகவல் தொகுப்பில் ( EMIS ) இத்தகையோர் குறித்து குழப்பநிலை நிலவுவது மறுப்பதற்கில்லை. 

ஏனெனில், புதிய பள்ளி ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இவர்களது பெயர் இடம்பெற்றிருக்கும் அதேவேளையில் பழைய பள்ளி EMIS இல் இவர்களது விவரங்கள் இருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மிக விரைவில் பள்ளிகளில் நிறுவ இருக்கும் ஆதார் அடிப்படையிலான தொட்டுணர் வருகைப் பதிவின் போது இவர்கள் தம் தினசரி வருகையினை ஏனையோரைப் போல் எளிதாகப் பதிவிட முடியாமல் தவிக்க அதிகம் வாய்ப்புண்டு. இவற்றைக் களைய, புதிய பணியிடத்தில் இவர்கள் விவரங்கள் ஈர்த்துக் கொள்ளப்பட்டு நிர்வகிப்பதுதான் சரியான வழியாக அமையும். 

அதுபோல், இரண்டு மாதங்கள் கடந்தும் கூட, எதிர்நோக்கியதைக் காட்டிலும் கூடுதலாகவே குழந்தைகள் சேர்க்கை நடந்துள்ள போதிலும், எந்தவொரு அடிப்படை பதிவேடுகள், பாடத்திட்டங்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள் என எதுவும் அரசால் வழங்கப்படாதது பெற்றோரிடையே அதிருப்தியைக் கூட்டுகிறது. வழங்கப்பட்டிருக்கும் கல்வித் துணைக்கருவிகள் மட்டும் போதாது. 

மேலும், அங்கு படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சீருடைகளும் காலணிகளும் விரைந்து வழங்க வேண்டி பெற்றோர்கள் நித்தமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதுதவிர, அப்பிஞ்சுக் குழந்தைகள் ஏனைய பள்ளிப் பிள்ளைகள் போன்று முழுநேரமும் பள்ளியிலேயே தங்க வைக்கப்படுவதால் மதிய உணவு தவிர, வேறு ஏதேனும் சிறப்பான சரிவிகித சிறுஉணவு இடையில் வழங்க அரசு தாயுள்ளத்துடன் முன்வருதல் அவசர அவசியம் ஆகும்.

இவர்களுக்குத் தனியாக எளிதாகக் கற்கும் இனிய சூழலை உண்டுபண்ணும் வகையில் குழந்தைநேய வகுப்பறைகள் ஒன்று புதிதாக அவ்வளாகத்திலேயே அமைத்துத் தருவது நலம்பயக்கும். 

சமூக நலத்துறையுடன் வெறுமனே பள்ளிக்கல்வித்துறை கைகோர்த்தால் மட்டும் போதாது. காலத்தில் சிலவற்றை நிறைவேற்றித் தர முழுமூச்சுடன் செயல்படுவது மிக இன்றியமையாதது. பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் அன்பான வேண்டுகோளும் இதுவேயாகும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group