காற்று மாசடைந்து வருவதன் விளைவாக மாரடைப்பு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் இந்த அபாயம் அதிகமாக உள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
நவீன மருத்துவ உலகம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்தாலும், நிரீழிவு,மாரடைப்பு போன்ற தொற்று அல்லாத நோய்கள் இன்றும் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக தான் உள்ளன.
உயர் ரத்த அழுத்தம், ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பு உள்ளிட்டவை இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றின் வரிசையில் காற்று மாசும் தற்போது சேர்ந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனடாவின் ஹாமில்டன் நகரில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகமும், ஹாமில்டன் ஹெல்த் சயின்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியா, சீனா, ஸ்வீடன், சவுதி அரேபியா, பிரேசில் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 21 நாடுகளைச் சேர்ந்த, 35 முதல் 70 வயதிற்குட்ட 1.62 லட்சம் பேரிடம், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உலக அளவில் பிரபல மருத்துவ வார இதழான லேன்கெட்டில் அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, காற்று மாசு, நீரிழிவு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறைந்த வருவாய் பிரிவினரில் இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
அதேசமயம் புகையிலை பழக்கம், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு நோய் ஆகியவை, உயர் வருவாய் வகுப்பினருக்கு இதய பிரச்னைகள் ஏற்பட காரணங்களாக உள்ளன.
இதேபோன்று இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தான்சானியா, ஜிம்பாபவே ஆகிய நாடுகளில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைவிட, இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது, குறிப்பிட்ட நாடுகளில் சராசரியாக ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார் என்றால், மூன்று பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர்.
அதேசமயம், கனடா, ஸ்வீடன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளர்ந்த நாடுகளில் இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட புற்றுநோய்க்கு இரையாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த நோய்களால் உயிரிழப்போரின் விகிதம் 60 : 40 என உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment