அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க, 5 அமைச்சர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக் கழகம் என்ற அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இது குறித்து உயர்கல்வித்துறையின் சார்பில் கடந்த மாதம் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக் கழகம், சீர்மிகு அண்ணா பல்கலைகழகம் என்று இரண்டாக பிரிப்பது தொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக ஆலோசனை வழங்க அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேற்கண்ட இந்த தீர்மானங்களின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் உறுதி அளிக்க வேண்டும். அப்போதுதான் சீர்மிகு அங்கீகாரத்துக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சீர்மிகு பல்கலை அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு செய்வது, அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்து பரிந்துரை அளிப்பார்கள்.
அவர்களுடன், அரசு அதிகாரிகள் 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், நிதித்துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவை அமைத்துள்ளதற்கான ஆணையை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment