இணையவழி வகுப்புக்கு மாற்று: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு அளிக்கும் 5 பரிந்துரைகள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 23 June 2020

இணையவழி வகுப்புக்கு மாற்று: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு அளிக்கும் 5 பரிந்துரைகள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here இணையவழி வகுப்புக்கு மாற்று: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு அளிக்கும் 5 பரிந்துரைகள்

இன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல. மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அமைத்த கல்விக்கான வல்லுநர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வல்லுநர் குழு முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம்:

குழந்தைகளின் உடல்நலமும் உளநலமுமே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது. கரோனா தொற்று குறைவதைக் கணக்கில் கொண்டு பள்ளிகளை ஜூலை மாதத்துக்குப் பின்னரும் கல்லூரிகளை செப்டம்பர் மாதத்துக்குப் பின்னரும் திறக்கலாம் என்ற ஆலோசனை இருந்து வருகிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரையில் பள்ளித் திறப்பு குறித்து முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கான இணையவழி வகுப்புகள் அல்லது பிற முறையிலான வகுப்புகள் குறித்து எந்த வழிகாட்டுதலையும் மாநில அரசு வெளியிடவில்லை.

ஆனாலும், தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. கற்றல் கற்பித்தலில் மாணவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூக நிலை ஆகியன முக்கியமானவை என உளவியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றர்.
மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் நகைப்புக்கு உரியதாகவும் வேதனை தரும் செயல்பாடாகவும் இருக்கிறது. இந்திய அளவில் தமிழகத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் விகிதம் 40 முதல் 50 சதவீதம் மட்டுமே இருக்கலாம் என அறியப்படுகிறது.

ஒரு வீட்டில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலும் அது குழந்தைகளிடம் இருப்பதில்லை. அவர்களது பெற்றோர் பயன்படுத்தும் நிலையிலேயே உள்ளது. எனவே, தமிழகத்தில் இணையவழிக் கல்வி அனைத்துக் குழந்தைகளையும் சென்றடையும் வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும்.

நன்கு கற்றவர்களே கூட இந்த வசதிகளைப் பயன்படுத்தத் தடுமாறும்போது தொழில்நுட்ப வசதிகளைக் கையாளும் திறனற்ற பெரும்பான்மையான மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பொருளாதார வேறுபாடுகளால் அமைந்த ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்தச் சமூகத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இணையவழி வகுப்புகளை நடைமுறைப்படுத்தலாம் என நினைப்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன் தராது.

தொழில்நுட்ப ரீதியான அனைத்தும் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கு உறுதுணை வளங்களாக இருக்கமுடியுமே தவிர வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக ஒருபோதும் அமைய முடியாது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் டிஜிட்டல் கற்றலுக்கு எதிரானது அல்ல.

பள்ளி சார்ந்த கற்றலுக்கும் பாடப் புத்தகம் சார்ந்த ஆசிரியர் வழி கற்பித்தலுக்குப் பதிலாக டிஜிட்டல் லேர்னிங் முறையின் ஒரு பகுதியான ஆன்லைன் நேரடி வகுப்புகளைத் திணிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஆன்லைன், ஆஃப்லைன் வகுப்புகளைத் தனியார் பள்ளிகள் ஆரம்பித்து உள்ளன. அதற்குத் தடை விதிக்க முடியாது என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அதற்கென கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்த வகுப்புகளின் நோக்கமே கட்டண வசூல்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. இதனால் தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் இடையில் கற்றலில் வேறுபாடுகள் உருவாகி வருகிறது.

எனவே அறிவியல் இயக்கத்தின் சார்பாக கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.

1. உடனடியான முன்னுரிமை அடிப்படையில் கிராம அளவில் / நகர்ப்புற அளவில் அங்கன்வாடியை மையமாக வைத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் தனியார், சின்னஞ்சிறு நர்சரி முதல் உயர்நிலைப் பள்ளி வரை உடனடியாக சத்துணவு வழங்க வேண்டும்.

2. தமிழகத்தில் இயங்கும் அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதலும் வழங்கவில்லை. ஆனாலும் தன்னிச்சையாக, தனியார் பள்ளிகள் மிகத் தீவிரமாக இணையவழிக் கற்றலை முன்னெடுத்து வருகின்றன. இது தமிழக அரசுக்கும், ஒரு வகையில் இந்திய அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கும் எதிரானது.

எனவே தனியார் பள்ளிகளின் இணையவழி வகுப்புகள், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண வசூலை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

3. பாடப் புத்தகங்களைக் குழந்தைகளின் கரங்களில் உடனடியாகச் சேர்ப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

4. இணையவழி அல்லாத தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னரே இளையான்குடி, திருவரங்குளம் ஒன்றியங்களில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் துளிர் அறிவொளி என்ற திட்டத்தின் மூலம் நன்கு பரிசோதனை செய்து, வெற்றிகண்ட சிட்டுக்கள் மையம் போன்ற மாற்று வகுப்பறைக்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை பள்ளிக் கல்வித்துறை அழைத்துப் பேசினால் உதவத் தயாராக இருக்கிறோம்.

5. தொலைக்காட்சி போன்ற வெகுமக்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி பேரா.நன்னன் தமிழ் கற்பிப்பத்ததைப் போல, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது போல பள்ளிகள் திறக்கும் வரை கற்றல் செயல்பாடுகளுக்கு நவீன தொழில

்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் வகையிலான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை பரிசீலித்துச் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group