வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த 4 லட்சம் கிராம தன்னார்வலர்கள் பணியிடம் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு ஆந்திர மாநில அரசு அடுத்தடுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்து வருகிறது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்னதாக பாதயாத்திரையின் போது வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி அன்றைய தினமே ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஒவ்வொரு கிராமத்திலும் 50 வீட்டிற்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்து அவர்கள் மூலமாக அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டிற்கே கொண்டுவந்து சேர்க்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதன் மூலமாக 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் கிராம தன்னார்வலர்கள் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 39 வயது நிர்ணயம் செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு, இன்டர்மீடியட் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வீட்டிற்கு ஒரு தன்னார்வலர்கள் என நியமிக்கக் கூடிய தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
இது ஊக்கத் தொகை மட்டும் தான். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே வேலையில்லா இளைஞர்கள் வேலை தேடி அலையும் நேரத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்கான இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஜூலை 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக , ரூ.5 ஆயிரம் வங்கியில் செலுத்தப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மூலமாக நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பயனாளிகளுக்கு வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment