சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பள்ளிகளில் குடிநீர் வாங்குவதற்கு பெற்றோர்} ஆசிரியர் கழகத்தில் உள்ள நிதியைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சென்னையில் பள்ளிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களே வீட்டிலிருந்து குடிநீரை எடுத்துவர வேண்டும் என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.
ஏற்கெனவே புத்தகப் பையை சுமந்து செல்லும் மாணவர்கள், தண்ணீர் பாட்டில்களை சுமந்து செல்வது பெரும் சுமையாக இருக்கும் என்று பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர்ப் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.
அந்தப் பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும்.
பள்ளிகளுக்குத் தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும்.
இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment