அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அன்றாடம் சமைத்து மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவையை உயர்த்துவதற்காக, ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும், சுகாதார கருவிகள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டுள்ளது, சத்துணவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இத்துடன் ஆறு அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 92 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன.
இதில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும், 5,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.ஒவ்வொரு மையத்திலும், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, 260 பேர் பணிபுரிகின்றனர். சத்துணவு சாப்பிடுவோருக்கு அன்றாடம் முட்டை வழங்கப்படுகிறது. இத்துடன் சனி, ஞாயிறு தவிர, வாரத்தின் ஐந்து நாட்களில், வெவ்வேறு கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் சத்துணவின் தரமும், சுவையும் உயரும் என்று அரசு இதை நடைமுறைப்படுத்தியுள்ளது.தமிழக அரசு சத்துணவுக்கான மானியத்தொகையை உயர்த்தியுள்ளதோடு, வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து வினியோகிக்கப்படும் சத்துணவின் தரத்தையும், சுவையையும் கூட்டுவதற்காக, கடுகு, பெருங்காயம், மல்லி மற்றும் மிளகுத்துாள், கிராம்பு, பட்டை, கசகச ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களையும் பெருமளவில் நிரப்பப்பட்டுள்ளன.
மையங்களுக்கு காஸ் சிலிண்டர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரித்து வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
அதன்படி சுகாதார கருவி கலப்பெட்டி வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலுள்ள, 228 ஊராட்சிகளுக்கு, 1,159 சுகாதார கருவி கலப்பெட்டி அனுப்பப்பட்டுள்ளன. இதில் நகம் வெட்டும் கருவி உள்ளது. சமையல் பணியில் ஈடுபடும் சமையலர், உதவியாளர் ஆகியோர் நகங்களை சரியான முறையில் வெட்டிய பின்பே சமையல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆறு டெட்டால் சோப் உள்ளது, சமையல் செய்வதற்கு முன்பு, டெட்டால் சோப்பால் கைகளை முழுமையாக கழுவிய பின்பே சமையல் பணியில் ஈடுபட வேண்டும். கைகளை துடைக்க இரு டர்க்கி துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சமையல் பணியில் ஈடுபடுவோரின் தலை முடி உணவில் விழாமல் இருக்க தலைக்கு தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புடவைக்கு மேல் அணிந்து கொள்ளும் வகையில், இரு கோட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை பி.டி.ஓ., கவிதா, சத்துணவு அமைப்பாளர்கள் 92 பேருக்கு சுகாதார கருவி கலப்பெட்டியை வழங்கி, உரிய அறிவுரைகள் வழங்கினார். சத்துணவு சமையலிலும், வினியோகத்திலும் சுகாதாரம் மேம்பட அரசு சுகாதார கருவி பெட்டி வழங்கியதற்கு சத்துணவு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment