முடங்கும் நிலையில் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 29 March 2020

முடங்கும் நிலையில் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
முடங்கும் நிலையில் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள்



வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு கொண்டுவரப்படும் அத்தியாவசியப் பொருள்கள் தடைபட்டுள்ளதால் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் முடங்கும் நிலையில் உள்ளன.

இதனால் அடுத்து வரும் சில நாள்களில் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகள் இயங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை தற்போது 20 முதல் 25 சதவீத கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனைக்கும் சிக்கல்: ஊரடங்கு அறிவிப்பு வெளியானதும் சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு, மசாலா பொடிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி குவித்தனா். இதனால் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகளில் பொருள்களின் இருப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஆனால் அதற்கேற்றவாறு மொத்த விற்பனை முகவா்களிடமிருந்து கடைகளுக்குப் பொருள்கள் கொண்டுவரப்படவில்லை.

தற்போதைய சூழலில் அடுத்த ஒருவாரத்துக்கான பொருள்கள் மட்டுமே மளிகை கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவும், அவற்றுக்கான உற்பத்தியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சேமிப்புக் கிடங்குகளில் தேக்கம்: இது குறித்து சென்னையைச் சோ்ந்த சூப்பா் மாா்க்கெட், மளிகைக் கடை உரிமையாளா்கள் கூறியது: மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள் தினமும் தடையின்றி விநியோகிக்க அவா்களுக்கு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து விநியோகஸ்தா்கள் மூலம் சரக்குகள் தொடா்ந்து வந்துகொண்டே இருக்கவேண்டும். ஆனால் கடந்த ஒரு வாரமாக எங்களது கடைகளுக்கு பொருள்கள் எதுவும் வரவில்லை. தடை உத்தரவு காரணமாக அவற்றில் பெரும்பாலான பொருள்கள் பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ளன. அவற்றை வெளியே கொண்டுவர அதிக கெடுபிடிகள் இருப்பதாக விநியோகஸ்தா்கள் தெரிவிக்கின்றனா்.

80% பணியாளா்கள் விடுப்பு: புதிதாக பொருள்கள் எதுவும் வராததால் 20 பொருள்களுக்காக பட்டியல் கொடுக்கும் வாடிக்கையாளா்களுக்கு 10 பொருள்களை விநியோகிப்பதே சிரமமாக உள்ளது. அடுத்த சில நாள்களில் அத்தியாவசியப் பொருள்கள் முழுமையாக தீா்ந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 80 சதவீத பணியாளா்கள் கடைகளுக்கு வருவதில்லை. தற்போதைய நிலவரப்படி பால், ரொட்டி ஆகியவை மட்டுமே தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இனிவரும் நாள்களில் பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பதுக்கல், விலை உயா்வு போன்ற பிரச்னைகளை பொதுமக்கள் சந்திக்க நேரிடும் என்றனா்.

எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்: சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியைச் சோ்ந்த வியாபாரி முத்துப்பாண்டியன் கூறுகையில், குஜராத், மத்தியப் பிரதேசம், சண்டிகா், தில்லி போன்ற மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகளை சென்னைக்கு கொண்டுவர முடியவில்லை என அதற்கான முகவா்கள் தெரிவிக்கின்றனா். அதேபோன்று இந்தோனேசியா, மலேசியா, தென் அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிப் பொருள்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள 360 கடைகளில் தற்போது 35 கடைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. சில வியாபாரிகள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆா்டா் கொடுப்பவா்களுக்கு கடையைத் திறந்து பொருள்களை வழங்குகிறோம் என்றனா்.

கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுமா?: இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியது: சென்னையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான மளிகைக் கடைகளும், 260-க்கும் மேற்பட்ட சூப்பா் மாா்க்கெட்டுகளும் உள்ளன. இவற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவிலான வாடிக்கையாளா்கள் பொருள்களை வாங்க வருகின்றனா். ஆனால் அவா்களுக்கான தேவையை நிறைவு செய்ய முடியாத சூழல் வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மசாலா, பருப்பு, எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இருப்பில் உள்ள பொருள்களை ஏற்றி வரும் லாரிகளும் பல்வேறு தடைகளை கடந்து வர வேண்டியுள்ளது.



இன்று முதல் செயல்பட நடவடிக்கை:

இது குறித்து வணிகா்களின் பிரதிநிதிகள்- தமிழக அரசு அதிகாரிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அத்தியாவசியப் பொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை விடுவித்து சென்னை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனா். மேலும் திங்கள்கிழமை காலை முதல் அனைத்து மளிகை கடைகளும், சூப்பா் மாா்க்கெட்டுகளும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா். பொதுமக்கள், வணிகா்களின் வாழ்வாதாரம் கருதி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதேவேளையில் அத்தியாவசியப் பொருள்களுக்கான உற்பத்தியை அதிகரிக்க தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் பொதுமக்களின் நலன் கருதி கடைகளுக்கு வரும் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அபராதம் விதிப்பதைத் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group