திறனறி தேர்வு காரணமாக, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்லாத, 1,243 ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல், வரும், 27,30ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில், தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
முதற்கட்ட பயிற்சி வகுப்பு, கடந்த, 15ல், தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்த நாளில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைவழங்குவதற்கான திறனறி தேர்வு, தமிழகம் முழுவதும் நடந்தது. பல ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இருந்த நிலையில், தேர்வு துறை சார்பில், தேர்வு பணியும் வழங்கப்பட்டது.ஒரே நேரத்தில், இரண்டு பணிகள் ஒதுக்கப்பட்டதால், எந்தப்பணிக்கு செல்வது என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இரண்டு பணிகளில், ஏதாவது ஒன்றுக்கு செல்லாவிட்டாலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தனர்; ஆனால், தேர்வு மாற்றப்படவில்லை.இந்நிலையில், சில ஆசிரியர்கள் தேர்வு பணியையும், சில ஆசிரியர்கள் தேர்தல் பணியையும் மேற்கொண்டனர்.
இதையடுத்து, தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு, மாவட்ட கலெக்டர்களின் உத்தரவின்படி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, திண்டுக்கல் மாவட்டத்தில், 1,243 ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராததால், விளக்கம் கேட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆசிரியர்களின் விளக்கம் ஏற்று கொள்ளப்படாத நிலையில், அவர்கள் மீது துறை ரீதியானநடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment