நார்ச்சத்து மிகுந்த காய்களில் பீர்க்கங்காயும் ஓன்று, குறைந்த கலோரிகளை கொண்டது. ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் இது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம்.
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும். ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.
பீர்க்கங்காயின் பிற பயன்கள்
பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கவும் கூடியது. பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.
No comments:
Post a Comment