Join Our KalviSeithi Telegram Group - Click Here
ஊரடங்கு நீட்டிப்பு? ஜூன் 29-ல் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
ஜூன் 30-ம் தேதி ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதாலும், மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவி வருவதாலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தலைமைச் செயலாளரைத் தலைவராக கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் (பணிக்குழு) அமைக்கப்பட்டது. அதன் கீழ் துறைவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அதேபோன்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு தாங்கள் ஆய்வு செய்த அடிப்படையிலான முடிவுகளை வைத்து முதல்வர், சுகாதார அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிக்கும்.
தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கும் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் பரவியுள்ளது. சென்னை தவிர வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்புவோரால் கரோனா தொற்று மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கூடுதலாக சோதனை செய்வதால் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 15-ம் தேதியும் இதேபோன்று ஆலோசனை நடத்தி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதேபோன்று தென் மாவட்டங்களில் தொற்று அதிகமாவதை அடுத்து மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். ஜூன் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பரவுவதை அடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Friday, 26 June 2020
Home
Unlabelled
ஊரடங்கு நீட்டிப்பு? ஜூன் 29-ல் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
ஊரடங்கு நீட்டிப்பு? ஜூன் 29-ல் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment