- ஆன்லைன் வகுப்பு விதிகள்: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 6க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னையை சேர்ந்த சரண்யா தாக்கல் செய்த மனு: பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள்நடத்தப்படுகின்றன. அலைபேசி, மடிக்கணியை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
அப்போது ஆபாச இணைய தளங்களால் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ''உரிய விதிகள் வகுக்கப்படவில்லை என்றால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொது மக்களின் பாதுகாவலன் என்ற முறையில் அரசு தான் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விதிமுறைகள் வகுப்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 6க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
ஆன்லைன் வகுப்புகளை அலைபேசி மடிக்கணினி வழியாக பார்ப்பதால் கண் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார அவகாசம் அளிக்கும்படி சிறப்பு பிளீடர் கோரினார்.
அதையும் நீதிபதிகள் ஏற்றனர்.இவ்வழக்கில் மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பள்ளிகளை திறப்பதில் ஆபத்து உள்ளது.
அதனால் பல மாநிலங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த துவங்கி விட்டனர். மனுதாரர் எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவையான விதிகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான தேவையற்ற காட்சிகள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்.
உள்ளூர் போலீசிலும் மனுதாரர் புகார் அளிக்கலாம்.மாணவர்களின் தொடர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை அரசு உறுதி செய்கிறது. பாதுகாப்பான முறையில் ஆன்லைன் கல்வியை வழங்க மத்திய அரசு உறுதி செய்கிறது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment