புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பம்பரமாய் சுழன்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனாவுக்கு எதிரான இந்த பெரும் போரில் நாட்டு மக்களை வழிநடத்துவதற்காக பிரதமர் மோடி அவ்வப்போது தொலைக்காட்சி வழியாக உரையாற்றி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில் 4-வது முறையாக நேற்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றினார்.
அந்த உரையில்,
உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையை இந்தியா கட்டுப்படுத்தி இருக்கிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் எடுக்கப்பட்ட பிற முக்கியமான முடிவுகள் நம் நாட்டின் லட்சக்கணக்கான குடிமக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளது.
ஊரடங்கின் முதல் கட்ட தளர்வின் போது கடைப்பிடித்ததை விட தற்போது மேலும் அதிகமான கவனம் தேவைப்படுகிறது. மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள், குடிமக்கள் அதே அளவு தீவிர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஊரடங்கு அறிவித்தவுடன் அரசு, 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தை' அறிவித்தது.
3 மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 3 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ பருப்பு ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வருகிற நாட்கள் விழாக்களின் காலமாக உள்ளது. ஜூலை 5-ந் தேதி குரு பூர்ணிமாவும் அதைத்தொடர்ந்து ஆவணி மாதமும் துவங்குகிறது. பின்னர் ரக்ஷா பந்தன், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகள் தொடருகின்றன. இவை தவிர கட்டி பிஹூ, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா ஆகியவையும் வருகின்றன. இந்த விழாக்காலம் மக்களின் தேவைகளையும், செலவினங்களையும் அதிகரிக்கின்றது.
இதை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவு திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை தொடரும்.
ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதத்துக்கு 5 கிலோ கடலைப்பருப்பு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment