2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் வங்கி முறையில் பல்வேறு மாற்றங்களும் புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு
அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை மாற்றி, இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகின்றன.தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், இன்று முதல் அந்த கார்டுகள் செயல்பாடு ரத்து செய்யப்படும்.
அவ்வாறு பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை எவ்விதக் கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம்.
என்இஎப்டி(NEFT) கட்டணம் தள்ளுபடி
அனைத்து வங்கிகளும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் என்இஎப்டி வழியாக வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ரூபே, யுபிஐ கட்டணம்
2020-ம் ஆண்டு முதல் ரூபே மற்றும் யுபிஐ செயலி மூலம் வர்த்தகர்கள் பணப் பரிமாற்றம் செய்தால், வர்த்தகர்களுக்கு வசூலிக்கப்படும் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது என்று நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு உள்ளாக விற்று முதல் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபே, யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை அளிப்பது கட்டாயம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பாதுகாப்பாகப் பணம் எடுக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளைப் பலப்படுத்தியுள்ளது. இதன்படி, இரவு 8 மணிக்கு மேல் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால், அவர்களின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என்ற வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இந்த விதிமுறை பொருந்தாது.
10 ஆயிரம் அபராதம்
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஒருவேளை அந்தத் தேதியில் மறந்திருந்தால் நிதியாண்டுக்குள் தாக்கல் செய்யலாம். தாமதமாக ஜனவரி 1-ம் தேதிக்குப் பின் தாக்கலாகும் கணக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஆதார், பான்கார்டு இணைப்பு
ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை இணைக்கும் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி முடிய இருந்த நிலையில், அதை 2020, மார்ச் 31-ம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இதை வருமான வரி செலுத்துவோர் பயன்படுத்திக்கொண்டு அடுத்த 3 மாதங்களுக்குள் பான் கார்டையும், ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment